ராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் மாமியாரையும் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு, அதே அரிவாளுடன் கணவனே காவல் நிலையத்தில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ராமநாதபுரம் வைகை நகரைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பியுள்ளார். இவரது மனைவி சர்மிளா மற்றும் மாமியார் பத்மாவதி ஆகியோர் உடன் வசித்து வந்த நிலையில், பத்மாவதி அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில காலமாகவே செல்லமுத்துவுக்கும் அவரது மனைவி சர்மிளாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

​இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற செல்லமுத்து, வீட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி சர்மிளா மற்றும் மாமியார் பத்மாவதி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

​கொலையைச் செய்த கையோடு செல்லமுத்து, இரத்தம் தோய்ந்த அரிவாளுடன் நேரடியாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உடனடியாக அவரைப் பிடித்துப் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​சம்பவ இடத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களைச் சேகரித்த நிலையில், இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தாயின் உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுத காட்சி காண்போரைச் சோகத்தில் ஆழ்த்தியது.

​முதற்கட்ட விசாரணையில், மனைவிக்குத் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்ததாக செல்லமுத்து சந்தேகித்ததே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய அனைத்துக் கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.