ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர், பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சொந்த பேத்தியையே (15 வயது) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமடையச் செய்துள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவரை இழந்த தனது மகளின் குடும்பத்திற்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய அந்த முதியவர், பேத்தி என்ற எண்ணம் கூட இல்லாமல் கடந்த சில மாதங்களாக அச்சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு சந்தேகமடைந்த தாய், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பேரதிர்ச்சியடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது, சொந்த தாத்தாவின் கொடூரச் செயல் அம்பலமானது.

இதுகுறித்து சிறுமியின் தாய் தரப்பில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், போக்சோ  உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் 73 வயது முதியவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தகுந்த மருத்துவ உதவிகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப உறுப்பினராலேயே, அதுவும் தாத்தாவாலேயே சிறுமி சீரழிக்கப்பட்ட இந்த அநாகரிகச் சம்பவம் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.