ஆண்ட்ராய்டு மொபைலும் இணையமும் நம் சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியிருந்தாலும், நம் உணவுப் பழக்கவழக்கத்தில் மிகப்பெரிய எதிர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, Gen Z தலைமுறையினர் வீட்டு உணவுகளைத் தவிர்த்து, ஆன்லைனில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி உண்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆன்லைன் உணவுகளில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை மிக அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு நாட்டின் 277 மாவட்டங்களில் 24,000 பேரிடம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் ஃபிரெஷ், பிளிங்இட், ஜெப்டோ, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற விரைவு வர்த்தகத் தளங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் ஃபுட்ஸ்’ ஆகும். ஆன்லைனில் உணவு வாங்கும் குடும்பங்களில் 39 சதவீதம் பேர், தங்கள் வீட்டில் உள்ள இளைஞர்களே அதிக அளவில் உணவுகளை ஆர்டர் செய்வதாகக் கூறியுள்ளனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஆன்லைன் உணவு விற்பனை சுமார் ₹80,300 கோடி அளவிற்கு நடந்துள்ளது. இது 2028-க்குள் ₹2,70,810 கோடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் உணவு வர்த்தகம் வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் தந்தாலும், மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தரக்குறைவான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு பற்றிய விவர நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் அச்சிடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இளம் வயதிலேயே இரத்த அழுத்தம்  மற்றும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் இன்றைய தலைமுறையினர், ஆன்லைன் உணவுகளைத் தவிர்த்து மீண்டும் ஆரோக்கியமான வீட்டு உணவுப் பழக்கத்திற்கு மாறுவதே வருங்காலத்தில் நோய் நொடியின்றி வாழ்வதற்கு ஒரே வழியாகும்.