தனது கடினமான இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு அவசர விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பிய அக்னிவீர் வீரர் சன்னி சிங் ராவத், தனது தந்தைக்குக் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

​இந்திய இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த கையோடு வீடு திரும்பிய சன்னி சிங் ராவத்திற்கு, அவரது தந்தை காலமான செய்தி பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து, தனது தந்தை ஆசைப்பட்டபடி தனது இந்திய இராணுவச் சீருடையை அணிந்துகொண்டு, அவரது உடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாகத் தனது கடைசி மரியாதையைச் செலுத்தினார்.

​சமூக வலைதளங்களில் பரவி வரும் இத்தகவல்களின்படி, தனது மகனை இந்திய இராணுவச் சீருடையில் பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தத் தந்தையின் வாழ்நாள் பெரு விருப்பமாக இருந்துள்ளது. தந்தையின் அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், மகன் இராணுவ உடையில் வந்து அஞ்சலி செலுத்திய இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

​இந்தப் பதிவைப் பார்த்த பல லட்சக்கணக்கான இணையவாசிகள், “இது இதயத்தை நொறுக்கும் சோகமான தருணம் என்றாலும், அந்த குடும்பத்திற்குப் மிகப்பெரிய பெருமிதமான தருணம்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தையின் மறைவும், மகனின் வீர அஞ்சலியும் அடங்கிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் அனைவரின் கண்ணீரையும் வரவழைத்து வருகிறது.