திருவள்ளூர் மாவட்டம்,  அடுத்த  அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சூழலில், விழாவின் போது அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகை திடீரென திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

திருவிழா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ நகையைச் சுருட்டிச் சென்றதை அறிந்த பூசாரியும், கோவில் நிர்வாகத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். எங்கு தேடியும் நகை கிடைப்பதற்கான எந்த தடயமும் இல்லாததால், திருவிழா களத்தில் திரண்டிருந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் கவலையிலும் குழப்பத்திலும் மூழ்கினர்.

அப்போது, கோவிலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எதிர்பாராத திருப்பமாக பூசாரியின் மனைவிக்கு திடீரென சாமி வந்து ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கியுள்ளார். சாமியாடியபடியே பேசிய அவர், திருடப்பட்ட அம்மனின் 10 சவரன் தங்க நகை எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும், எந்த இடத்தில் தேட வேண்டும் என்றும் உரத்த குரலில் வாக்குக் கூறியுள்ளார். இதைக் கேட்டு வியப்படைந்த ஊர் மக்கள் மற்றும் பூசாரியின் குடும்பத்தினர், அவர் சுட்டிக்காட்டிய இடத்தை நோக்கி விரைந்து சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அவர் வாக்குக் கொடுத்தபடியே, குறிப்பிட்ட இடத்தில் திருடப்பட்ட 10 சவரன் தங்க நகையும் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகையைக் கண்டெடுத்த ஊர் மக்கள், திரவுபதி அம்மனின் சக்தியால்தான் இந்த நகை மீண்டும் கிடைத்துள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறி வழிபாடுகளைத் தொடர்ந்தனர். சாமியாடி நகையைக் கண்டுபிடித்துக் கொடுத்த இந்த விசித்திர நிகழ்வு அய்யனேரி கிராமம் மற்றும் திருத்தணி சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ போல பரவி, பக்தர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.