இன்றைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினர் சொந்த வீடு வாங்குவது என்பது பெரும் கனவாகிவிட்டது. குறிப்பாக, நொய்டா போன்ற வளர்ந்து வரும் நகரங்களில், மிகச் சிறிய அளவிலான குடியிருப்புகளின் விலை கூட விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது குறித்து ரிஷி சாண்டில்யா என்ற நபர் வெளியிட்டுள்ள வீடியோ, நடுத்தர வர்க்கத்தினரின் நிதர்சனமான அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நொய்டாவில் தற்போது விற்பனைக்கு வரும் ‘பிஜியன் ஹோல்’ என அழைக்கப்படும் சிறிய ரக 2BHK வீடுகளின் விலை கூட, ரூ.75 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இருப்பதாக அவர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஒரு சாதாரண நபர் சொந்தமாக வீடு வாங்க விரும்பினால், முதலில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை முன்பணமாக திரட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்பின், மீதமுள்ள ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை கடன் பெற வேண்டுமெனில், மாத வருமானம் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1.2 லட்சம் வரை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Rishi Shandilya (@rrrealtywithrishi)

“>

அப்படிச் சம்பாதித்தாலும், கடனுக்கான மாத தவணையாக சுமார் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை செலுத்த வேண்டியிருக்கும். சொகுசு வீடுகள் அல்ல, மிகக் குறுகிய இடவசதி கொண்ட வீடுகளுக்கே இந்த நிலைமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளது, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ரியல் எஸ்டேட் சந்தையின் இந்த ‘கசப்பான உண்மை’ குறித்துப் பலரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மாத சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியர்கள், இவ்வளவு பெரிய தொகையைச் சேமித்து, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி வீடு வாங்குவது என்பது சாத்தியமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.