மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், தன்னை கிண்டல் செய்த போதை ஆசாமியை புடவை அணிந்த பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தின்போது, அந்தப் பெண் பொதுமக்களுக்கு முன்னிலையில் அந்த நபரை சரமாரியாகத் தாக்கியதோடு, கையைப் பிடித்து இழுத்துச் சென்று தண்டித்துள்ளார்.
தன்னிடம் தகாத முறையில் பேசியதாகவும், தவறான நோக்கத்துடன் தன்னை நோட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டி, அந்த நபரை பலமுறை கன்னத்தில் அறைந்து, அவரது கழுத்தைப் பிடித்து நெரித்து அந்தப் பெண் ஆவேசமாக சத்தமிட்டுள்ளார். இந்த மோதலின்போது அந்த நபர் கடுமையான போதையில் இருந்ததால், சில நேரங்களில் மயங்கி விழுவது போல் தள்ளாடியுள்ளார். இருப்பினும், அந்தப் பெண் ஆத்திரமடங்காமல் அவரைத் தொடர்ந்து அடித்துள்ளார்.
#WATCH | Woman Hits Drunk Man For Using Foul Language Against Her In MP’s Chhatarpur #MPnews #MadhyaPradesh #viralvideo pic.twitter.com/0FLuPrFIDT
— Free Press Madhya Pradesh (@FreePressMP) July 17, 2026
“>
சிறிது நேரத்திற்குப் பிறகு சற்றே தெளிவடைந்த அந்த நபர், அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்த்துப் பேச முயன்றார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த கடுமையான வாக்குவாதம் மற்றும் சண்டைக்குப் பிறகு, இருவரும் அங்கிருந்து வெவ்வேறு திசைகளில் கலைந்து சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அங்குள்ள காவல் நிலையம் முன்பே நிகழ்ந்துள்ளது. ஆனால், அந்த நேரத்தில் காவல் சாவடி மூடப்பட்டிருந்ததாகவும், எந்தவொரு போலீசாரும் அங்கு பணியில் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வளவு நீண்ட நேரம் சண்டை நடந்தும் போலீசார் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்பதோடு, அங்கிருந்த பொதுமக்களும் வேடிக்கை பார்த்தார்களே தவிர எவரும் சண்டையை நிறுத்த முன்வரவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் அந்த நபர் யார் என்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. மேலும், இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான புகாரோ அல்லது வழக்கோ பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
