உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பெரும் பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல் துறை அதிகாரிகள் தனது புகாரைக் கேட்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து நள்ளிரவில் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

காவல் நிலையத்திற்குள் நுழைந்த அந்த இளைஞர், அங்குள்ள  இன்ஸ்பெக்டர் நாற்காலியில் சட்டை ஏதும் அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் அமர்ந்துள்ளார். மேலும், மேஜை மேல் இருந்த போலீஸ் தொப்பியை எடுத்துத் தனது தலையில் மாட்டிக்கொண்டு, அங்கிருந்த மேஜையை ஆக்ரோஷமாகத் தட்டி அதிகாரியைப் போலப் பாவனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அதோடு நிறுத்தாமல், இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்தபடியே மேஜை மீது இருந்த சில முக்கிய அரசு கோப்புகளில் அவர் தன்னிச்சையாகக் கையெழுத்திட்டுள்ளார். “இனி எல்லா முடிவுகளும் இந்த இடத்திலேயே எடுக்கப்படும் என்று கூச்சலிட்டவாறே, சில முக்கியமான ஆவணங்களை அவர் கிழித்து எறிந்துள்ளார். பின்னர், காவல் நிலையத்தின் கதவு கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, அங்கிருந்த பூந்தொட்டிகள், இருக்கைகள் மற்றும் பிரதான வாயில் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காவல் நிலையக் கண்ணாடிகளை உடைக்கும் போது அந்த இளைஞரின் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர் கடுமையான போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.