மகாராஷ்டிர மாநிலம் மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் மீது, கடந்த 2022ஆம் ஆண்டு 26 வயது திருமணமான பெண் ஒருவர் காவல்துறையில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்திருந்தார். சமூக ஊடக விளம்பரம் மூலம் பழகிய அந்த வாலிபர், ஆசைவார்த்தை கூறித் தன்னை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தங்களது ரகசிய உரையாடல்களைத் தனது கணவரிடம் காட்டிவிடுவதாக மிரட்டி ரூ.1.79 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தானே சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் போக்கையே மாற்றியமைக்கும் வகையில் யாரும் எதிர்பாராத ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு ஆதரவாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தப் பெண் திடீரெனத் தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொடுத்தார். இதனால் நீதிமன்றத்தில் இருந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

விசாரணையின் போது நீதிபதி, “உன் முதல் கணவருக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?” என்று அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த அந்தப் பெண், “எங்களுக்குள் இருந்த உடல்ரீதியான உறவு இருதரப்பு சம்மதத்துடனேயே நடந்தது. அவர் மீது எனக்கு இப்போது எந்தப் புகாரும் இல்லை. நான் எனது முதல் கணவரை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி இந்த வாலிபரையே முறைப்படி திருமணம் செய்துகொண்டேன்” என்று கூறி நீதிமன்றத்தில் குண்டைத் தூக்கிப் போட்டார்.

இதனையடுத்து நீதிபதி தனது அதிரடித் தீர்ப்பை வாசித்தார். அதில், “பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணே தங்களுக்குள் இருந்த உடலுறவு பரஸ்பர சம்மதத்துடன் தான் நடந்தது என்பதைத் தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி இருக்கும்போது இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டுக்கே இடமில்லை. மேலும், இப்பெண்ணின் தந்தை அளித்த சாட்சியங்கள் அனைத்தும் வெறும் கேள்வி ஞானத்தின் அடிப்படையில் கூறப்பட்டவை என்பதால் அவை நிராகரிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்ட நீதிபதி, வாலிபர் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் வழக்குகளை ரத்து செய்து, அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டார். புகாரளித்த பெண்ணே அந்த வாலிபரைத் திருமணம் செய்து கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்த இச்சம்பவம் தானே நீதிமன்றத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.