மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் நகரில் காவல்துறையினரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர் (53) என்ற கிரேடு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தனியார் பள்ளி ஆசிரியையைத் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட ஆசிரியை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் போலீஸ் அதிகாரி தற்போது தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கும் போலீஸ் அதிகாரி ஹரிஷ் கட்டாவ்கருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. இதை  பயன்படுத்திக் கொண்ட கட்டாவ்கர், கடந்த மே 2025 முதல் 15 ஜூலை 2026 வரையிலான காலகட்டத்தில் அந்தப் பெண்ணைக் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். ஹோட்டல் வேலை மற்றும் வீட்டின் இன்டீரியர் வேலைகளைக் காட்டுவதாகக் கூறி, ஆசிரியையைத் தனது வீட்டிற்கு வரவழைத்துச் சீரழித்ததும், இதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தபோது அவரது கணவரிடம் கூறி அவமானப்படுத்துவேன் என மிரட்டியதும் புகாரில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், போலீஸ் அதிகாரி கட்டாவ்கர் ஆசிரியையின் மொபைலுக்குத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதை அவரது கணவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த கணவர், கட்டாவ்கரைத் தொலைபேசியில் அழைத்து எச்சரித்தபோது, “எனக்கு உன் மனைவியைக் காதலிப்பதாக” நேரடியாகக் கூறிவிட்டுப் போனை துண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஆசிரியையின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற கட்டாவ்கர், சையத் நிசார் என்பவரின் காரில் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று, காரினுள்ளேயே வைத்துப் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். பின்னர், இரவு 10 மணியளவில் பெண்ணின் மொபைலைப் பறித்துக் கொண்டு, அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஹரிஷ் கட்டாவ்கர் கடந்த 1993ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவரது கடந்த கால வரலாறும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் ஆபாசமாகவும் தவறாகவும் நடந்து கொண்ட குற்றத்திற்காக இவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் புதிய வழக்கில் ஜவஹர்நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்ததும் கட்டாவ்கர் தலைமறைவாகிவிட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை அறிக்கை போலீஸ் கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய அதிகாரியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.