காசியாபாத் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். ரத்தம் சொட்டச் சொட்ட உதவி கேட்டு, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த ‘பிங்க்’ காவல் சாவடியின் வாசலுக்கே அவர் வந்துள்ளார். ஆனால், அங்கிருந்த காவலர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யவோ அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ எந்த முயற்சியும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

நீண்ட நேரம் ரத்த வெள்ளத்தில் சாலையிலேயே கிடந்த அந்த வாலிபர், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பேசிய அவரது குடும்பத்தினர், “காவல்துறையினர் நினைத்திருந்தால் அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்; அவர்களின் அலட்சியமே எங்கள் பிள்ளையைக் கொன்றுவிட்டது” என்று கதறி அழுது குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே, அவர் காவல் சாவடிக்கு வெளியே ரத்தக் கறைகளுடன் உயிருக்குப் போராடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைக் கலங்க வைத்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், அவசர உதவிக்காகவும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்படும் காவல் சாவடிகளின் வாசலிலேயே ஒரு மனித உயிர் ரத்தம் வடிந்து இறந்திருப்பது பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட காவலர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.