பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நீடித்த ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போரினால் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது. அந்தப் போரின் இரண்டாம் நாளிலேயே ஈரானின் உச்சகட்ட தலைவரான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இருதரப்புத் தாக்குதல்களால் பெரும் உயிர்ச்சேதங்களும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்ட நிலையில், தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அதே சமயம், பேச்சுவார்த்தை நடத்தவும் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஈரானின் அப்பாஸ் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 14 ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்குப் பதிலடியாக, ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஒருவேளை டொனால்ட் ட்ரம்ப் ஈரானைத் தாக்கினால், இஸ்ரேலும் இந்தப் போரில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சூடுபிடித்துள்ள இந்தப் போர்ச் சூழல், சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
