தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடலைத் தோட்டத்திலேயே புதைத்துவிட்டு, கடந்த 8 மாதங்களாகக் கள்ளக்காதலனுடன் எவ்வித பயமுமின்றி உல்லாசச் சுற்றுலா சென்ற பெண் உட்பட இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஐதராபாத் மியாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்டேஷ் (45) என்பவரது மனைவி சத்தியவதி (40). இவருக்கும் மதுசூதன் ரெட்டி (38) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவர் பெண்டேஷுக்குத் தெரியவந்ததால் தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியவதி, தனது கள்ளக்காதலன் மதுசூதன் ரெட்டியுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, ஒரு நாள் இரவு சமயம் பார்த்து பெண்டேஷைத் துடிதுடிக்கக் கொலை செய்த இருவரும், யாருக்கும் சந்தேகம் வராதவாறு உடலை வீட்டின் அருகிலுள்ள விவசாயத் தோட்டத்தில் குழிதோண்டிப் புதைத்து மறைத்துள்ளனர்.
கணவர் திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, அவர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருப்பதாகக் கூறி அக்கம் பக்கத்தினரை சத்தியவதி நம்ப வைத்துள்ளார். அதே நேரத்தில், தன் கணவர் இறந்த சில நாட்களிலேயே எவ்வித சலனமுமின்றித் தனது கள்ளக்காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஜாலியாகச் சுற்றித் திரிந்துள்ளார். இதற்கிடையே, காணாமல் போன பெண்டேஷ் குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 8 மாதங்களாகத் தொடர்ந்த இந்த விசாரணையில், சத்தியவதியின் நடவடிக்கைகளில் போலீஸாருக்குக் கடுமையான சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரைப் பிடித்துத் தங்களின் பாணியில் விசாரித்த போது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து புதைத்த கொடூர உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
