உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது 4 வயதுப் பச்சிளம் மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரஹ்த்ரா பகுதியைச் சேர்ந்த கபில் என்பவருக்கும், கோவிந்த்பூரைச் சேர்ந்த காஜல் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிக் கிருஷ்ணா என்ற மகனும், பாரி என்ற மகளும் இருந்தனர்.

அண்மையில் காஜலின் சகோதரர் திருமணம் முடிந்த நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாகக் காஜல் தனது பெற்றோர் வீட்டிலேயே சில நாட்கள் தங்குவதாகக் கூறியதால் தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கபில், தனது 4 வயது மகன் கிருஷ்ணாவுக்குக் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கபிலும் அதே விஷத்தை அருந்தித் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் அவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த நெஞ்சைப் பிசையும் இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் குறித்து மீரட் காவல் ஆய்வாளர்  தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரு குடும்பத்தாரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.