கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான பிரதான சாலை ஒன்றில் திடீரெனப் புகுந்த பிரம்மாண்ட நாகப்பாம்பு ஒன்று, நடுரோட்டில் படம் எடுத்து ஆடியதால் அந்த வழியே செல்லவிருந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரு நகரின் முக்கியச் சாலையில், வழக்கம்போல வாகனங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு நாகப்பாம்பு சாலையின் நடுவே ஊர்ந்து வந்துள்ளது. வாகனங்களின் சத்தத்தைக் கேட்டு மிரட்சியடைந்த அந்தப் பாம்பு, சாலையின் மையப்பகுதியிலேயே நிலைக்கொண்டு தனது தலையை உயர்த்திப் படம் எடுத்து ஆடத் தொடங்கியதால், அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அவசர அவசரமாக நிறுத்தினர்.
இதனால் அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்தைச் சூழ்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர், ஆபத்தான முறையில் நடுரோட்டில் நின்ற பாம்பை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்ததுடன், வனத்துறையினருக்கும் உடனடியாகத் தகவல் கொடுத்தனர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அங்கிருந்தவர்கள் பாம்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பான முறையில் அதைச் சாலையோரப் புதர்ப் பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னரே அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டுப் போக்குவரத்து நிலைமை சீரடைந்தது. இந்தத் துடுக்குத்தனமான நாகப்பாம்பின் சாலை ஆக்கிரமிப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
