ஒருபுறம் பாகிஸ்தானுடன் எல்லை மோதல்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், மறுபுறம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு இந்தியாவுடனான தனது உறவை மிக வேகமாக வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தலிபான் அரசின் விவசாயம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அதாவுல்லா உமாரி அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்திறங்கிய அவர், “இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு இன்று நேற்றல்ல, பல நூற்றாண்டுகள் பழமையானது; இங்கு வந்த பிறகு நான் என் சொந்த மக்களிடையே இருப்பது போன்ற உணர்வையே பெறுகிறேன். நம் இரு நாட்டு மக்களின் டி.என்.ஏ ஒன்றுதான்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானை அதிரவைத்துள்ள தலிபான் அமைச்சரின் இந்த பாசமழைப் பேச்சு, தெற்காசிய பிராந்தியத்தில் மாறிவரும் புதிய ராஜதந்திர சமன்பாடுகளின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் தலிபான் அரசின் வெளியுறவு, வர்த்தகம், சுகாதாரம் மற்றும் விவசாயத் துறை என 4 முக்கிய மூத்த அமைச்சர்கள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தலிபான் அரசை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் மக்களின் நலனைக் கருதி அங்குள்ள நாடாளுமன்றக் கட்டிடம், சல்மா அணை, சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் எனப் பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. 2021-ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் கோதுமை, மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போதைய சூழலில், ஆப்கானிஸ்தானுக்கு நவீன விவசாயத் தொழில்நுட்பம், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் மற்றும் பால்வளத் துறையில் இந்தியாவின் முதலீடு தேவைப்படுவதால், தலிபான்கள் முழுமையாக இந்தியாவை நம்பத் தொடங்கியுள்ளனர்; இது பாகிஸ்தான் அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
