கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் ஒரு ஜீவநதியை சடங்குகளின் பெயரால் மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற ஒரு நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் எழுப்பியுள்ளது. ஈமச்சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் கொட்டப்படும் பழைய துணிகளும் கழிவுகளும் அந்த நதியின் தூய்மையை முற்றிலுமாக சிதைத்து வருகின்றன என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குச் சான்றாக, தன்னார்வலர்களின் களப்பணி அறிக்கைகளும், நதிநீர் விழிப்புணர்வு குறித்த புத்தகத் தரவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. வெறும் 21 நாட்களில் மட்டும் சுமார் 90 டன் அளவுக்கு ஆடை கழிவுகள் ஆற்றிலிருந்து அள்ளப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல், சுற்றுச்சூழல் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது. இந்த மனிதத் தவறுகளால், ஆற்றில் வாழும் அரிய வகை இந்தியக் கரு ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் அந்தத் துணிகளில் சிக்கி, சுவாசிக்க முடியாமல் இறந்து போகும் அவலமும் இந்த விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத ரீதியான சுதந்திரமும் சடங்குகளும் ஒரு குடிமகனின் உரிமை என்றாலும், அது பொதுமக்களின் சுகாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பதை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை நீதிமன்றம் மதிக்கிறது; அதே வேளையில், நதியைப் பாழாக்குவதை வேடிக்கை பார்க்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளது.

இதற்குத் தீர்வாக, சடங்குகளை ஆற்று நீருக்குள் செய்யாமல், ஆற்றங்கரைகளில் இதற்கென உருவாக்கப்படும் பிரத்யேகக் குளங்களைப் பயன்படுத்தும் மாற்றுத் திட்டத்தை நெல்லை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பான கடுமையான விதிமுறைகளையும், நிரந்தரத் தீர்வுக்கான செயல் திட்டங்களையும் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்மிக அமைப்புகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இணைந்து ஒருமித்த நல்லதொரு முடிவை எட்ட ஏதுவாக, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.