கார்ப்பரேட் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சந்திக்கும் விடுப்புச் சிக்கல்கள் குறித்து, ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள ஆதங்கப் பதிவு தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அந்த ஊழியர், தனது உறவினர்களுடன் திடீரென ஒரு சுற்றுலாப் பயணத்திற்குத் திட்டமிட்டு, அதற்காகப் பயண டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளையும் முன்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ஆரம்பத்தில் தனது மேனேஜரிடம் சாதாரணமாகப் பேசியபோது, அவரும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வாய்மொழியாகச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்பொழுது முறைப்படி விடுப்புக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த மேனேஜர் தனது வார்த்தையை மாற்றி, “கொடுக்கப்பட்ட ப்ராஜெக்ட் வேலைகளை முழுமையாக முடித்தால் மட்டுமே விடுப்பு ஒப்புதல் அளிக்கப்படும், இல்லையெனில் அனைத்தும் ரத்து” என்று பிடிவாதம் பிடித்துக் கண்டிப்பு காட்டி வருகிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், “இன்று அலுவலக நேரம் முடியும் வரை என்னால் முடிந்த வேலைகளை முடித்துவிட்டு நான் பயணத்தைக் தொடர்வேன்” என்று மேனேஜருக்குத் தெரிவித்துள்ளார்,

ஆனால் அதற்கு மேனேஜர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் தனது வேலைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் பகிர்ந்துள்ள இந்தத் தவிப்புப் பதிவிற்கு, “வாய்மொழி ஒப்புதலைச் சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாது என்பதால், அதிகபட்சமாகச் சம்பளக் குறைப்பு என்ற ஆபத்தை எதிர்கொள்ளத் துணிந்தால் நீங்கள் தாராளமாகக் கிளம்பலாம்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது காரசாரமான ஆலோசனைகளையும், மேனேஜருக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.