மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள கேஸ் சிலிண்டர் விநியோக நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் பொம்மைகளைப் போல அடித்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் கிராமப்புறப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அங்குள்ள ஒரு எரிவாயு ஏஜென்சியின் சேமிப்புக் கிடங்கும் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியதால், அங்கிருந்த ஆயிரக்கணக்கான காலி மற்றும் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்று வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கின.

 

ஆற்றின் ஆக்ரோஷமான வெள்ள நீரில் ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட கரையோர கிராம மக்கள் பெரும் பீதியும் அதிர்ச்சியும் அடைந்தனர். இந்த சிலிண்டர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் போது ஒன்றோடு ஒன்று மோதி ஏதேனும் அசம்பாவிதம் அல்லது வெடிவிபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கித் தஞ்சம் புகுந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களைப் பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரமான வெள்ளப் பாதிப்பு குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிப் பார்ப்பவர்களை உலுக்கி வருகிறது.