தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், அடுக்க வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திடீரென சரிந்து விழுந்ததில் பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்.சுத்திப்பட்டு பகுதியில் அரசுக்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நெல் மூட்டை சரிந்து விழுந்த கொடூரம்!

இந்தக் கிடங்கில் தற்காலிக ஊழியர்களாகப் பல பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். எப்போதும் போல இன்றும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் எதிர்பாராத விதமாக திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்துள்ளன.

சின்னபொண்ணு பரிதாப பலி!

இந்தக் கொடூர விபத்தில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தற்காலிக பெண் ஊழியரான சின்னபொண்ணு என்பவர் மீது நெல் மூட்டைகள் மொத்தமாகச் சரிந்து விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் தொழிலாளி இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

​படுகாயமடைந்த பெண்ணை மீட்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்த இந்தச் சம்பவம், தஞ்சை பகுதி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!