எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்சட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 23 நபர்களைப் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுதல், இளைஞர்களைத் தவறான வழியில் சேர்த்தல், ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களைக் கடத்துதல் மற்றும் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கான சதித்திட்டங்களைத் தீட்டுதல் போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தடைப் பட்டியலில் அப்துர் ரவுஃப், ஹபீஸ் காலித் வலீத், ராணா இப்திகார், முஃப்தி மசூத் இலியாஸ் மற்றும் முகமது முசாதிக் போன்ற முக்கியப் பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் எல்லை தாண்டிய ஊடுருவல், ஆன்லைன் மூலம் இளைஞர்களைக் கவர்ந்து பயங்கரவாத வலையமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியுள்ளது.

பாதுகாப்பு முகமைகள் இவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, இவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.