நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில், ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளிலும் தலா 1,000 மெகாவாட் வீதம் மொத்தம் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த திடீர் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடங்குளம் முதலாவது அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் இப்போது மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

​இந்த விபரீத பழுது குறித்து தகவல் அறிந்ததும் அணுமின் நிலைய இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக களமிறங்கி பழுதை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அணு உலையில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்திற்கான 562 மெகாவாட் மின் விநியோகம் தடைபட்டுள்ளதால், மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து மின்சார வாரியம் ஆலோசித்து வருவது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.