ஜெர்மனி அரசு தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழிலாளர் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரவும் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊழியர்கள் தகுந்த மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் இனி மருத்துவ விடுப்பு எடுக்க முடியாது என்ற புதிய விதியை அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி, ஊழியர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு நேரடியாக விடுப்பு எடுக்க முடியும்; உடனடியாக சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
ஆனால், புதிய விதிமுறையின்படி விடுப்பு எடுக்கும் முதல் நாளிலிருந்தே மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட தகுந்த சான்றிதழை ஊழியர்கள் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மருத்துவ விடுப்பு மாற்றம் என்பது ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ள 34 அம்ச பொருளாதார சீர்திருத்தத் தொகுப்பின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
மேலும் வணிகச் செயல்பாடுகளில் தேவையற்ற தடைகளைக் குறைக்கவும், நிறுவனங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் இந்தத் திட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனங்கள் ஊழியர்களை 2030-ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் வரையிலான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அனுமதிக்கப்படும்.
மேலும், அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களை முறையான இழப்பீடு வழங்கி பணிநீக்கம் செய்யும் நடைமுறையும் எளிதாக்கப்பட உள்ளது. இவற்றுடன், ஓய்வூதிய வயதை தற்போதைய 67-ல் இருந்து உயர்த்துதல், ஆண்டுக்கு €250,000-க்கு மேல் சம்பாதிக்கும் உயர் வருவாய் பிரிவினருக்கு வரி விதிப்பை அதிகரித்து, அதன் மூலம் நடுத்தர மக்களுக்கு €10 பில்லியன் அளவிற்கு வருமான வரி நிவாரணம் வழங்குதல் போன்ற முக்கிய அம்சங்களும் இந்தச் சீர்திருத்தத்தில் இடம் பெற்றுள்ளன.
