திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தபால் காரராக பணியாற்றி வரும் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு வர வேண்டிய முக்கியமான தபால்களை உரிய முகவரியில் கொண்டு சேர்க்காமல், நீண்ட நாட்களாகத் தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து அரசு ஆவணங்கள், நேர்முகத் தேர்வு கடிதங்கள், ஏடிஎம் கார்டுகள் மற்றும் அத்தியாவசியத் தபால்கள் எனப் பொதுமக்கள் பலரும் தங்களுக்கு வர வேண்டிய கடிதங்கள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், அவை அனைத்தும் செந்தில்குமாரின் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“>

அதோடு பொதுமக்களின் அவசியத் தேவைகளுக்கான இந்தத் தபால்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்காமல், கடமை தவறி வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த செந்தில்குமாரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கடுமையான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தபால் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், அவர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தபால்கள் ஏன் பதுக்கி வைக்கப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தவும் தீவிரமாக முற்பட்டு வருகின்றனர்.