சொந்தமாக வீடு மற்றும் மனைகள் வாங்கும் பொதுமக்களை ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) தற்பொழுது அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.50,000 முதல் அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு விளம்பரத்திலும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘ரெரா’ (RERA) எண்ணை மிகக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

​குறிப்பாக, விளம்பரங்களில் வீடு வாங்குவோர் எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியாதபடி மிகச் சிறிய எழுத்துக்களிலோ அல்லது தெளிவற்ற முறையிலோ விதிகளை மறைத்து விளம்பரம் செய்தால், அதற்கும் இனிமேல் அபராதம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர்களின் நலனை முழுமையாகப் பாதுகாக்கவும், ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த விஸ்வரூப நடவடிக்கை, தற்பொழுது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ஏமாற்றும் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மத்தியில் பலத்த கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.