கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில், உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி மனைவி பிரியங்காவை (29) அவரது கணவர் பசவராஜ் வத்தார் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், பிரியங்கா ஒரு ஸ்டாஃப் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். பிரியங்காவின் உடல் எடையை கேலி செய்தும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறித் துன்புறுத்தியும், கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தொடங்கிய இந்தத் துன்புறுத்தலால், பிரியங்கா இரண்டு முறை கர்ப்பமாக இருந்தும் அடியால் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக நவல்குண்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கணவர் பசவராஜ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை மற்றும் உடல் ரீதியான கேலிப் பேச்சுகளே இக்கொலைக்குக் காரணம் என்று பிரியங்காவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
