மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில், 60 வயது முதியவர் ஒருவரின் சிறுநீர்ப்பையில் இருந்த 33 கற்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஓராண்டாகக் கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமப்பட்டு வந்த அந்த முதியவர், தொடர் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் மேற்கொண்ட ‘ஓபன் சிஸ்டோலித்தோடமி’ என்ற அறுவை சிகிச்சை மூலம், சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுநீர்ப்பையில் இருந்த 33 கற்களும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. இந்த எண்ணிக்கையைக் கண்டு மருத்துவக் குழுவினரே ஆச்சரியமடைந்தனர்.
அந்த முதியவருக்கு இருந்த புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் காரணமாக, சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் தேங்கியதே இத்தனை கற்கள் உருவாவதற்குக் முக்கிய காரணமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த முதியவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றிருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும், இதுபோன்ற பாதிப்புள்ளவர்கள் அலட்சியம் காட்டாமல் உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
