குவைத்தில் வசித்து வரும் 36 வயது அரபு நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அவரது வீட்டில் இருந்த விலை உயர்ந்த தளவாடங்கள், மின்னணு சாதனங்கள், தங்க நகைகள் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது போல மாயமாகியிருந்தன.
அதேபோல், அவரது மனைவியையும் கைக்குழந்தையையும் காணவில்லை. எவ்வளவோ தேடியும், அவரது மனைவியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இரவு 8 மணியளவில், தனது மனைவி அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் மூலம், அவர் தனது குழந்தையுடன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், விவாகரத்து கோரப்போவதாகவும் அறிந்தபோது அந்த நபர் நிலைகுலைந்து போனார்.
கணவன் வேலைக்குச் சென்றிருந்த அந்தச் சில மணிநேரங்களிலேயே, தனது மனைவி திட்டமிட்டு வீட்டை காலி செய்துவிட்டு, குழந்தையை அழைத்துக்கொண்டு விமான நிலையம் மூலம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தம்பதியினரிடையே அவ்வப்போது சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இவ்வளவு பெரிய முடிவை எடுக்குமளவிற்கு எதுவும் நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
முறையான அனுமதியின்றி குழந்தையை அழைத்துச் சென்றது மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண் எவ்வாறு பொருட்களை விற்றார் மற்றும் எப்படி நாட்டை விட்டு வெளியேறினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
