தற்போது ஐரோப்பா நாடு கடும் வெப்ப அலையைச் சந்தித்து வரும் நிலையில், அந்த வெப்பத்தின் தாக்கத்தால் சாலைகள் உருகியது போன்றும், வாகனங்கள் சிதைந்தது போன்றும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆனால், இவை அனைத்தும் ஐரோப்பாவில் நடந்தவை அல்ல என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு, காரின் பானட் பலூன் போல உப்பியது மற்றும் குப்பைத் தொட்டி உருகியது போன்ற வீடியோக்கள் பழையவை மற்றும் அவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் எடுக்கப்பட்டவை.

இத்தகைய வீடியோக்கள் தவறான தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே வீணான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

ஐரோப்பாவில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டி மிகத் தீவிரமான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த கடும் வெப்பத்தால் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இந்த அதீத வெப்பத்தால் உடல்நல பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களை நம்பி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், தற்போதைய சூழலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.