27 வயது இளைஞர் ஒருவர், அடிக்கடி பார்ட்டிகள் மற்றும் ஸ்பா செல்வது போன்ற தேவையற்ற செலவுகளால் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வலையில் சிக்கித் தவிப்பதாக ரெடிட் (Reddit) தளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மாத சம்பளம் 23,000 ரூபாய் மட்டுமே பெறும் அவர், வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்குப் பிறகு கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் திணறுவதாகவும், புதிய கடன் பெற முயற்சித்தும் கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் கடன் சுமையால் தனது சிபில் ஸ்கோரும் குறைந்து வருவதைக் கண்டு அவர் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள்வதற்குப் பலரும் அவருக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். சிலர் கடன் தவணைகளை நிறுத்திவிட்டு, வங்கியுடன் பேசி சமரசம் செய்துகொள்ளுமாறு கூற, மற்றவர்களோ கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்காத வகையில், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, குடும்பத்தினரிடம் உதவி பெற்று படிப்படியாகக் கடனை அடைக்க அறிவுறுத்தியுள்ளனர்.
எது எப்படியிருப்பினும், எடுத்த முடிவுகளைத் திருத்திக் கொண்டு, சிக்கனமாக வாழ்ந்து கடனை அடைப்பதே சிறந்தது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. கடன் சுமை ஒருவரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால், இளைஞர்கள் நிதி மேலாண்மையில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
