பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் காப்பகத்தில், இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்டதாக வெளியான வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அந்த வீடியோக்களில், குழந்தைகளைத் துணிகளைத் துவைக்கும் இயந்திரத்திற்குள் அடைத்து வைப்பது, கழிவறை ஜெட் ஸ்ப்ரே மூலம் வாயில் தண்ணீரை அடிப்பது மற்றும் கழிவறையில் அடைத்து வைப்பது போன்ற கொடூரமான செயல்கள் பதிவாகியிருந்தன.
இது குறித்து வாட்ஸ்அப்பில் வைரலான வீடியோக்களைத் தொடர்ந்து, குழந்தை உதவி மையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட 5 பெண் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், ஜூவெனைல் ஜஸ்டிஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பணியில் இருக்கும் பெற்றோர்கள் நம்பிக்கையுடன் தங்கள் குழந்தைகளை விட்டுச் சென்ற இடத்தில், இவ்வாறு குழந்தைகள் துன்புறுத்தப்பட்டது பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
