அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் புறக்கணித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த துணை பொதுச் செயலாளர் பதவி தங்களுக்கு வேண்டாம் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் முடிந்த பிறகு கிட்டத்தட்ட ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பலரும் அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அடுத்தடுத்து தேர்தலில் ஏற்படும் தோல்விகளால் அதிருப்தி அடைந்து நிர்வாகிகள் விலகுவதாகவும் கட்சியை சுயநலத்திற்காக இபிஎஸ் அழிவு பாதைக்கு இழுத்து செல்வதாகவும் விலகும் நிர்வாகிகள் குற்றம் சாட்டும் நிலையில் இன்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து துரோகிகள் வெளியேறுவதாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாகவும் மிகவும் எழுச்சியாகவும் இருக்கிறார்கள். அரை நூற்றாண்டு காலம் கண்ட அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைத்தால் கண்டிப்பாக அது நடக்காது. இரட்டை இலை சின்னத்திற்கு தான் மக்கள் வாக்களித்த நிலையில் இன்று அவர்களை ராஜினாமா செய்ய வைத்து தங்களுடைய கட்சியில் இணைக்கின்றனர். மேலும் இப்படி ஒரு ஆட்சியை நடத்த முதலமைச்சர் விஜய்க்கு அருகதை இருக்கிறதா என்றார்.