“உங்களின் தவறான முடிவுகளால்…” என்று தொடங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அளித்த புதிய பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என எஸ்.பி.வேலுமணி உட்பட 9 முக்கிய நிர்வாகிகள் அதிரடியாகப் பொறுப்புகளைத் துறந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகளுக்கு உறுதி அளித்தபடி, மீண்டும் அவர்கள் வகித்த பதவிகள் வழங்கப்படவில்லை என்று எடப்பாடி மீது அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

​மேலும் அந்த அறிக்கையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக எடுத்த தவறான முடிவுகளின் காரணமாகவே 2021, 2024 மற்றும் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து படுதோல்விகளைச் சந்திக்க நேரிட்டது என்று பகிரங்கமாகச் சாடியுள்ளனர். “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயம் தெய்வம் ஜெயலலிதாவால் ரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட அதிமுக எனும் பிரம்மாண்ட ஆலவிருட்சம், உங்களின் தவறான முடிவுகளால் இன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது” என்று அவர்கள் மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளனர். சீனியர் புள்ளிகள் 9 பேர் ஒரே நேரத்தில் இபிஎஸ்-க்கு எதிராகத் திரும்பியிருப்பது அதிமுக கோட்டையையே உலுக்கியுள்ளது.