தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி தனது கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  நாகேஷ் – கவிதா தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வெளியூரில் தங்கிப் படித்து வரும் நிலையில், மற்ற இரு மகன்களும் பெற்றோருடன் வசித்து வந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, நாகேஷின் வீட்டிற்குள் இருந்து திடீரென பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாகேஷின் இரண்டாவது மகன் பயத்துடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், அங்கிருந்தவர்கள் கதவைத் திறக்குமாறு சத்தமிட்டுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து கவிதா கதவைத் திறந்தபோது, உள்ளே நாகேஷ் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளார். குடும்பத் தகராறில் கவிதா தனது கணவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இந்த ஒட்டுமொத்த கொடூரமும் அவர்களது இளைய மகனின் கண் முன்னாலேயே நடந்துள்ளது. பெத்த தாயின் வெறிச்செயலைக் கண்டு அந்தச் சிறுவன் பயத்தில் உறைந்து அழுதுகொண்டிருந்தான். உயிருக்குப் போராடிய நாகேஷை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததால் வேறு  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நாகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கவிதாவை அதிரடியாகக் கைது செய்தனர். கவிதாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட தகராறிலேயே இந்தத் துணிகரக் கொலை நடந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத்தகவலை போலீஸார் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும், கொலையின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.