தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று தவெக-வின் தோழமைக் கட்சிகள் கூட்டமும், அதைத் தொடர்ந்து அரசு அளிக்கும் சிறப்பு விருந்தும் நடைபெறுகிறது. அரசியல் வட்டாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்காதது கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ என்ற பலத்த சந்தேகத்தையும் வதந்திகளையும் கிளப்பியது. ​இந்நிலையில், இன்று நடைபெற்ற இக்கூட்டம் முடிந்த உடனே சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இரு தலைவர்களும், “இன்று நடைபெறும் தோழமைக் கட்சிகள் கூட்டத்திலும், அரசின் விருந்திலும் நாங்கள் பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஏழை எளிய மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முதல்வரிடம் முன்வைத்துள்ளோம்; இந்த அரசுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் போல் தொடர்ந்து நீடிக்கும்” என்று திட்டவட்டமாக விளக்கி வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.