ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்  இளையராஜாவை கட்சி மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததுடன், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி வரை பேரம் பேசிய வழக்கில், யூடியூபரும் ‘IPDS’ நிறுவனருமான திருநாவுக்கரசு உள்ளிட்ட 3 பேரை சென்னை  போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தமக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதுடன், மறுத்தபோது தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த 29ம் தேதி  அன்று சென்னை காவல் ஆணையரிடம் எம்.எல்.ஏ. இளையராஜா புகார் அளித்திருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது  சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டது என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய கரூரைச் சேர்ந்த நபர்களைக் கைது செய்ய சென்னை போலீஸார் உடனடியாக கரூர் விரைந்தனர். அங்கு ‘சக்தி மெஸ்’ என்ற உணவகத்தை நடத்தி வரும் தி.மு.க. பிரமுகர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். கைதான கார்த்திக் தி.மு.க. விளையாட்டு அணியின் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பதுடன், இவர்கள் இருவரும் செந்தில் பாலாஜியின் ‘கரூர் கம்பெனி’க்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

த.வெ.க. தரப்பில் மொத்தம் 3 எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து, தலா ரூ.15 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க. ஆட்சியைத் கவிழ்க்கத் திரைமறைவில் சதி நடப்பதாக நேற்று அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கைதாகி, வீடுகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.