மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியில் உள்ள புடி என்ற இடத்தில், மதுக்கடைகளுக்கு எதிராக உள்ளூர் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவினால் குடும்பங்கள் அழிகின்றன, வன்முறைகள் பெருகுகின்றன, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் வீணாகிறது எனக்கூறி இப்பெண்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டக் களத்திற்கு சஞ்சு சௌத்ரி என்ற நபர் முழு போதையில் வந்துள்ளார்.

அங்கு போராடிக் கொண்டிருந்த பெண்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி, ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், அந்த குடிகார சஞ்சு சௌத்ரியின் சொந்த மனைவியும் அதே போராட்டத்தில் தான் அமர்ந்திருந்தார். தன் கணவன் பொதுவெளியில் வந்து அசிங்கம் செய்வதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர் சக பெண்களின் உதவியோடு தனது கணவனைப் பிடித்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டினார்.

கம்பத்தில் கட்டியதோடு மட்டுமல்லாமல், அவர் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால், அவரது வாயில் டேப்பை ஒட்டி ஒட்டுமொத்தமாக வாயடைக்கச் செய்தனர் அங்கிருந்த பெண்கள். இதனால் அந்த இடமே சில நிமிடங்கள் பெரும் போர்க்களமாக மாறியது. இந்த விநோத விபரீத சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, தற்போது அது இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சஞ்சு சௌத்ரியைக் கம்பத்தில் இருந்து மீட்டனர்.