இன்றைய நவீன உலகில் மக்கள் ஒவ்வொரு நொடிக்கும் கணக்கு பார்த்து, நேரத்தைத் துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியா (Nvidia) நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், தனது கையில் ஒருபோதும் கடிகாரம் அணிவதே இல்லை. ஒரு மல்டி பில்லியனர் வாட்ச் அணியாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், ஆனால் இதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம் ஒளிந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு கால்டெக் (Caltech) பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் பேசிய ஜென்சன், தனது வாழ்க்கையையே மாற்றிய அந்த சுவாரசியமான ஜப்பான் கதையைப் பகிர்ந்து கொண்டார்.

ஒருமுறை அவர் தனது குடும்பத்தினருடன் ஜப்பானின் கியோட்டோ நகரில் உள்ள ஒரு பாசித் தோட்டத்திற்கு சென்றிருந்தார். அன்று கடுமையான கோடை வெயில். அங்கு ஒரு வயதான தோட்டக்காரர் முழங்காலிட்டு அமர்ந்து, ஒரு சிறிய மூங்கில் இடுக்கிகொண்டு காய்ந்த பாசித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கூடையில் போட்டுக் கொண்டிருந்தார்.

தோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது, ஆனால் அந்த முதியவரிடம் இருந்த உபகரணமோ மிகவும் சிறியது. வியப்படைந்த ஜென்சன் அவரிடம் சென்று, “தோட்டம் இவ்வளவு பெரியதாக இருக்கிறது, உங்கள் கூடையோ சிறியது. எப்படி உங்களால் தனியாக இதைப் பராமரிக்க முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர் புன்னகையுடன், “என்னிடம் நிறைய நேரம் இருக்கிறது” என்று பதிலளித்தார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக இதே வேலையைத்தான் செய்து வருகிறார். அந்த முதியவரின் வார்த்தைகள் ஜென்சனுக்கு ஒரு புதிய ஞானத்தைத் தந்தது.

அதனால்தான் தான் வாட்ச் அணிவதில்லை என்று கூறிய ஜென்சன், “எனக்கு ‘இப்போது’  என்ற இந்த நிகழ்காலம் மட்டுமே முக்கியம். வாட்ச் பார்க்கும்போது நாம் எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது கடந்த காலத்தைப் பற்றியோ சிந்திக்கத் தொடங்கி, நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். நான் ஒருபோதும் வாய்ப்புகளைத் துரத்தி ஓடுவதில்லை, அவை என்னைத் தேடி வர விடுகிறேன். நான் பேராசை கொண்டவன் அல்ல, மாறாக இப்போது செய்யும் வேலையைச் மிகச் சிறந்ததாகச் செய்யவே விரும்புகிறேன்” என்று தனது வெற்றிக்கான ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.