மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவி கிரண் உயிரிழந்தார். வாக்குவாதத்தின் போது, “உன்னைப் போல ஆயிரம் பேரை என்னால் வைத்துக்கொள்ள முடியும்” என்று மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவர் சிவா, அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனைவியின் அந்த வார்த்தைகள் ஒரு கணவனின் சுயமரியாதையைச் சீண்டும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டது. கொலை செய்ய வேண்டும் என்ற முன் திட்டமோ அல்லது ஆயுதத்துடன் வந்ததோ இல்லை என்பதால், இது திட்டமிடப்படாத கொலை என்று நீதிமன்றம் கருதியது.
மேலும், குற்றத்திற்குப் பின் கணவர் தானாகவே முன்வந்து காவல்துறையிடம் சரணடைந்ததையும் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகக் குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
