சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள அதிநவீன ‘ஹங்கோர்’ வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவிற்குப் புதிய பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளன. ‘டைப் 039பி’ ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ‘ஏர்-இன்டிபென்டன்ட் பிரொபல்ஷன்’  தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், வளிமண்டல ஆக்சிஜன் உதவியின்றி நீண்ட காலம் நீருக்கடியில் மறைந்திருந்து செயல்படும் திறன் கொண்டவை.

இந்தியக் கடற்படையின் கண்காணிப்பில் சிக்காமல் தாக்குதல் நடத்தவும், உளவு பார்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தகைய 8 கப்பல்களைப் பாகிஸ்தான் சீனாவுடன் இணைந்து தயாரிக்கிறது.

1971 போரில் இந்தியக் கப்பலான ‘ஐஎன்எஸ் குக்ரி’யைத் தாக்கிய பழைய ‘ஹங்கோர்’ நீர்மூழ்கிக் கப்பலின் பெயரை நினைவுகூரும் வகையில், இந்தியாவிற்கு ஒரு சவாலாக இந்தத் திட்டத்தைப் பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகையால், இதுவரை இந்தியக் கடற்படையின் பாதுகாப்பான கோட்டையாகக் கருதப்படும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்படை கட்டளை மையம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் தளமான ‘ஐஎன்எஸ் வர்ஷா’, மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள இந்தியத் தளங்கள் எனப் பல முக்கியமான பாதுகாப்பு மையங்கள் இந்த பிராந்தியத்தில் இருப்பதால், பாகிஸ்தானின் இந்த நகர்வு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

1971 போரில் ‘பிஎன்எஸ் காசி’ என்ற நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா மூழ்கடித்த பிறகு, பாகிஸ்தான் வங்காள விரிகுடாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்தது. தற்போது சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத் துணையுடன், மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டப் பாகிஸ்தான் முயற்சிப்பது, இந்தியாவிற்குப் பாதுகாப்பு ரீதியாகப் பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.