தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்கிறார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா உள்ளிட்ட கட்சியின் டெல்லி மேலிட முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் திரளாகப் பங்கேற்கின்றனர்.

​சமீபகாலமாக ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற அதிரடியான அரசியல் முழக்கத்தை முன்வைத்து வந்த மாணிக்கம் தாகூரின் இந்த புதிய தலைமை, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்த அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. புதிய கூட்டணியின் பின்னணியில், தமிழகத்தில் கட்சியை வலுவான இயக்கமாக மாற்றுவதே தனது லட்சியம் எனப் பொறுப்பேற்பதற்கு முன்பே மாணிக்கம் தாகூர் சூளுரைத்துள்ளார்.