தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத்தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த நியமனம் குறித்து ஏற்கனவே அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உரிய விளக்கம் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெங்கட் நாராயணா அவர்கள் முதலமைச்சர் விஜய்யின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் தான் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், இந்தப் பதவி என்பது ஆட்சி நிர்வாகத்தில் எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்கும் பொறுப்பு கிடையாது என்றும் அமைச்சர் விளக்கியுள்ளதை திருமாவளவன் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.
அமைச்சரின் இந்த விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதா என்று செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பியபோது, திருமாவளவன் தனது பாணியில் மிகவும் சாதுரியமாகப் பதில் அளித்தார். இது முழுக்க முழுக்க ஆளும் கட்சி மற்றும் அரசின் உள்விவகாரம் என்றும், அரசுப் பதவிதான் என்றாலும்கூட தமக்கு நம்பிக்கைக்குரிய ஒரு தோழருக்கு அத்தகைய பொறுப்பை வழங்குவதற்கான முழு அதிகாரம் முதலமைச்சர் விஜய்க்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த நியமனத்தினால் அரசு நிர்வாகத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் நேரப்போவதில்லை என்ற அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்தையே தானும் வெளிப்படுத்துவதாகக் கூறி, இந்த டெல்லி பிரதிநிதி நியமன விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் முடிவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தந்துள்ளார்.
