வெளிநாடுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் கைநிறைய சம்பளம் மற்றும் அங்குள்ள ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஹாட் டாபிக்காக இருக்கும். வளர்ந்த நாடுகளின் வலுவான பொருளாதாரம், உயர் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்பட்டாலும், அங்குள்ள வாழ்க்கைச் செலவினங்கள் மிக அதிகம் என்பதை இன்ஸ்டாகிராம் தம்பதி ஒருவர் வீடியோ மூலம் மிக எளிமையாக விளக்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இந்தியாவில் கிடைக்கும் சாதாரண ₹40,000 மாதச் சம்பளத்தையும், சுவிட்சர்லாந்து நாட்டில் கிடைக்கும் மாபெரும் ₹7,00,000 மாதச் சம்பளத்தையும் ஒப்பிட்டு, இரண்டு நாடுகளிலும் உள்ள வாழ்க்கை முறை மற்றும் சேமிப்பு சாத்தியக்கூறுகளை அவர்கள்  பிரித்துக் காட்டியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Chantal & Guru (@clogsandcurries)

இன்ஸ்டாகிராமில் ‘@clogsandcurries’ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஷான்டல் என்பவர் இந்தியாவின் பட்ஜெட் விவரங்களையும், குரு என்பவர் சுவிட்சர்லாந்தின் பட்ஜெட் விவரங்களையும் பகிர்ந்துள்ளனர். இந்தியாவில் ஒரு வீட்டிற்கான வாடகை ₹20,000 ஆக இருக்கும் பட்சத்தில், சுவிட்சர்லாந்தில் அதற்கு நிகரான வீட்டிற்கு ₹2,00,000 வரை வாடகை கொடுக்க வேண்டியுள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல் மளிகைப் பொருட்கள், மருத்துவக் காப்பீடு, பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை ஒப்பிட்ட அவர்கள், இந்தியாவில் குழந்தைகளைப் பராமரிக்க ₹5,000 செலவாகும் இடத்தில், சுவிட்சர்லாந்தில் ₹1,50,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “பொருளாதார ரீதியாக மட்டுமே இந்த ஒப்பீடு உள்ளது; ஆனால் சாலைகளின் தரம், காற்றின் தரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களையும் ஒப்பிட வேண்டும்” என்று கமெண்ட் செய்ய, அதற்கு அந்த தம்பதியினர், “நல்ல கேள்வி, அடுத்த வீடியோவில் அதைப்பற்றிப் பேசுகிறோம்” என்று பதிலளித்துள்ளதால் இந்த விவாதம் மேலும் சூடுபிடித்துள்ளது.