உத்தரப் பிரதேச மாநிலம் ஓராய் பகுதியில், நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் நீச்சல் உடைக் குள்ளேயே (Underwear) பாம்பு ஒன்று புகுந்த நெஞ்சைப் பதறவைக்கும் விசித்திர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுக்க, அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குளித்துக் கொண்டிருக்கும்போது தனது ஆடைக்குள் ஏதோ ஒன்று புகுந்ததை உணர்ந்த அந்த இளைஞர், உடனடியாக தன் நண்பர்களைக் கூப்பிட்டு எச்சரித்துள்ளார். பாம்பு கடித்துவிடுமோ என்ற பயத்தில் நீச்சல் குளத்தைச் சுற்றி இருந்தவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. நல்லவேளையாக, அந்தப் பாம்பு இளைஞரைக் கடிக்கவில்லை. ஆபத்தான அந்தச் சூழலிலும் பதற்றமடைந்து எந்தவொரு திடீர் அசைவுகளையும் செய்யாமல் அந்த இளைஞர் அமைதியாக நிற்க, அவரது நண்பர்கள் சாதுரியமாக மீட்புக் களத்தில் இறங்கினர். ஆடைக்குள் இருக்கும் பாம்பை எடுப்பதற்காக அந்த இளைஞரின் நீச்சல் உடையை நண்பர்கள் கழற்ற உதவினர். பின்னர், அந்த இளைஞர் டவல்லால் உடலை மறைத்துக் கொள்ள, நண்பர்கள் ஒரு துணி மற்றும் குச்சியைப் பயன்படுத்தி, இளைஞருக்கும் பாம்புக்கும் எந்தவித காயமும் ஏற்படாதவாறு மிகவும் எச்சரிக்கையுடன் பாம்பை வெளியில் எடுத்தனர்.

 

மீட்கப்பட்ட பாம்பு விஷமில்லாத சாதாரண தண்ணீர்ப் பாம்பு என்பது பின்னர் தெரியவந்தது. அது உடனடியாக நீச்சல் குளப் பகுதியிலிருந்து தூரமாகக் கொண்டு போய் பாதுகாப்பாக விடப்பட்டது. இதனால் அந்த இளைஞர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இச்சம்பவம் ஆன்லைனில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பலரும் இளைஞர் தப்பியதற்கு நிம்மதி தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், இனிமேல் நீச்சல் குளத்திற்குப் போகவே பயமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.