இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது ஆட்டத்தை இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

கூகுள் டிரெண்ட்ஸ் தகவல்களின்படி, கடந்த மூன்று மாதங்களாக பாகிஸ்தானில் வைபவ் சூர்யவன்ஷி குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, இவரது உண்மையான வயது, ஐபிஎல் தொடரில் இவர் பெற்ற ஊதியம், இவரது கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் மற்றும் உயரம் போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ்வின் அதிரடி பேட்டிங், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது வயது குறித்துப் பாகிஸ்தானில் பல சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் இவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

ஒரு இளம் வீரர் சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கியிருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.