அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களைச் சந்தித்த போது வி.பி.சிங் தனது 11 மாத ஆட்சிக் காலத்திலேயே 30 ஆண்டுகால திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை படைத்தவர் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த 5 ஆண்டுகளில் சமூக நீதிக்காக திமுக அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்றும், வாய் வழியே மட்டுமே சமூக நீதி பேசிய அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் தவறிவிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், சமூக நீதிக்கான சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தற்போதைய தவெக அரசு வெளியிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதால் தான் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவதாகவும், இதன் மூலம் சட்டமன்றம் மக்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தவெக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மாண்புடனும், திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மட்டுமே பேசி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், முதல்வர் விஜய் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் தவறான பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள் என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் மீறி திமுகவினர் தங்களைக் கேலி, கிண்டல் செய்ததாகக் குறிப்பிட்ட அவர், ‘கொளத்தூர்’ என்ற வார்த்தையைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும், சட்டமன்றத்தில் ‘கட்சி நிதி’ பற்றிப் பேசியவுடன் திமுகவினர் பதறியடித்துக்கொண்டு எழுந்தது ஏன் என்றும் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.