ரன்ஜி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்குடன் களம் கண்ட சத் பால் (எ) சத்து என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர், காவல் துறையுடனான துப்பாக்கிச் சூடு மோதலில் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த இவர், ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளராகப் புகழ்பெற வேண்டும் என்ற கனவோடு இருந்தவர். ஆனால், காண்டி கிரிக்கெட் விளையாடத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் தேர்வுக் குழுவுடன் ஏற்பட்ட மோதலால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது.
அதன் பிறகு, தவறான பாதையைத் தேர்ந்தெடுத்த சத் பால், கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை என 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் சிக்கி, ஒரு கொடூரமான குற்றவாளியாக மாறினார்.
ஜாமீனில் வெளியே வந்த பிறகு தனது மனைவியின் தொடர்பில் இருந்த நபரைத் தீர்த்துக்கட்டியது மற்றும் காவல் துறையிடம் இருந்து தப்பி ஓடியது எனப் பல குற்றங்களில் ஈடுபட்ட இவர், சமீபத்தில் பஞ்சாப் போலீஸ் காவலில் இருந்து தப்பி உத்தரப் பிரதேசம் சென்றார்.
அங்குப் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இவரைத் தேடி வந்த காவல் துறையினர், திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் சுட்டுக் கொன்றனர். ஆரம்பத்தில் நம்பிக்கைக்குரிய வீரராகத் திகழ்ந்த ஒருவர், சரியான வழிகாட்டுதல் இன்றி சறுக்கி விழுந்து, இறுதியில் குற்ற உலகில் இப்படித் தனது வாழ்க்கையைத் தொலைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
