ஐபிஎல் 2027 தொடருக்கான டிரேடிங் விண்டோ மூலம், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும் இதற்குப் பதிலாக டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2025 மெகா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பந்தை சாதனை தொகையான ரூ. 27 கோடிக்கு வாங்கியிருந்தது.

ஆனால், கடந்த சீசனில் லக்னோ அணி கடைசி இடத்தைப் பிடித்ததுடன், பந்தின் ஃபார்மும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், தற்போது அவர் ரூ. 12 கோடி வரை சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டு, ரூ. 15 கோடிக்கு மீண்டும் தனது பழைய டெல்லி அணிக்கே திரும்பியுள்ளார்.

இதனால் டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், குல்தீப் யாதவுக்கு நன்றி தெரிவித்தும், ரிஷப் பந்தை மீண்டும் அணிக்கு வரவேற்பதும் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் முதலில் சிரிப்பது போன்ற ‘லாஃபிங் எமோஜி’ மூலம் பதிலளித்தது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வார்னர் மற்றொரு பதிவில் விளக்கம் அளித்தார்.

அதில், “ஏலத்தின் போது சில நேரங்களில் விஷயங்கள் கைமீறிப் போகலாம். ஒரு உரிமையாளர் உங்களை ரிலீஸ் செய்ய நினைக்கும் போது, உங்களை ஏலத்தில் எடுக்க நினைத்து தவறிய மற்றொரு உரிமையாளர் உங்களுக்காகக் காத்திருப்பார். இது எப்போதுமே நடக்கக்கூடிய ஒன்றுதான்” என்று ஐபிஎல் ஏலத்தின் சூழலையும், ரிஷப் பந்தின் ஃபார்ம் குறைவையும் குறிப்பிட்டு ரசிகர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.