தருமபுரி அருகே கடந்த 2023-ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த இந்த கொடூர சம்பவத்தில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின் பானு, குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷ் (21) என்பவரை குற்றவாளியாக உறுதி செய்து இந்த பரபரப்புத் தீர்ப்பை வழங்கினார். மனசாட்சியை உலுக்கிய இக்குற்றத்திற்காக, குற்றவாளி பிரகாஷுக்கு இரட்டை மரண தண்டனையுடன், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் மற்றும் ரூ. 50,000 அபராதமும் விதித்து நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.