ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதி அறையில், 20 வயதுடைய பி.சி.ஏ  இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக, அம்மாநில போக்குவரத்து மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் விபூதி பூஷன் ஜெனாவின் சகோதரி மகனான பிஸ்வஜித் ஜெனா (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த மாணவியும், அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த பிஸ்வஜித்தும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிஸ்வஜித் கொடுத்த கடுமையான மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாகவே மாணவி இந்த தீவிர முடிவை எடுத்ததாக அவரது தாய்மாமன் கோலாந்தரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில்,  போலீசார் வழக்குப் பதிவு செய்து பிஸ்வஜித்தை உடனடியாகக் கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து பெர்ஹாம்பூர் எஸ்பி சரவண விவேக் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாணவியின் தற்கொலைக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும்; எனினும் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் செயல்முறை நடுவர்  விரைந்து சென்று, மாணவியின் விடுதி அறையில் இருந்து டிஜிட்டல் மற்றும் இயற்பியல் ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

மேலும், மாணவி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், விடுதியின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.